என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Thursday, 18 October 2012

கதையொன்று

நகரெங்கும் கோரப்பசியுடன்
திரியும் என் கற்பனைக் குதிரை
எதிர்படும் யாவரையும்
தன் கதையின் மாந்தராக
உள்வாங்கி மென்று சரிவராது
போக பின்பு துப்புகிறது.

வெறிச்சோடிப் போன
அங்காடித்தெரு வழி நடக்கையில்
ஒரு வளையல்கடைக்கு
அடையாளம் காட்டித் தொங்கும்
இரசக்கண்ணாடி முன் நின்று
முகம் பார்த்து மெல்லத்
தொடங்குகிறது தன் கதையை.

-சோமா (Thanks to Kanavu, Oct 2012)

கட்டுரையொன்று

நேற்றையஇன்றைய
நாளைக்கான ஆழ்கடல்
முத்துக்களை மூச்சுத்
தொலைத்துத் தேடிக்
கண்ணயர்வோடுக் கோர்த்து
முடியப்படுவதில்
கொல்லப்படுகின்றன
அதையொட்டி வரும்
களைப்பாறும் எண்ணங்கள். 

முடிச்சுகளின் இறுக்கத்தில்
எழுதப்படுகிறது ஜீவித
முத்துக்களுடனான
கூடல் மணவாழ்க்கை
பலநேரம் துடிப்பும்
மறு நேரம் களிப்பும்
ஒரு நேரம் அயர்வும்
சிலநேரம் வெறுப்பும்
மாறிமாறி வந்து
போவதில் பிறக்கின்றன
பிள்ளைகள் ஒவ்வொரு
வண்ணத்தில்.

SOMA (Thanks to Kanavu-Oct-2012)


Friday, 5 October 2012

கவிதையொன்று

ஒரு கவிதை புனைவதற்கான
எந்த முன்னேற்பாடுமின்றி
நடந்து விடுகிறது
ஒரு தனிமைப் பயணம்.
இளங்காலைக் கனவு
பிடித்தமானவர்களுடனான
தேநீர் அளவளாவல்
மாலை வேளையின்
ஆள் நடமாட்டமில்லாத
சாலையோர நடை
மன நிறைவான தருணம்
கடந்து போகும் அழகுப்பெண்
கண் சிமிட்டிச் சிரித்து
மடியில் வந்து அமரும்
எதிர் வீட்டு மழலை
நீரோடையில் ஒரு
நிர்வாணக் குளியல்
துரத்திப் பின்னால் வரும்
முழு நிலவின் வெட்கம்
கோயில் கர்ப்பக்கிரக
ஆழ்ந்த தியானமென
வாழ்ந்து இன்புற்ற
பூரண சுகானுபவத்தை
வார்த்தைகளுக்குள்
அடக்கி விட முயற்சித்துத்
தோற்றுப்போகின்றன
கவிதைகள்.

சோமா (Thanks to Kanaiyazhi, October 2012)

Thursday, 4 October 2012

க‌ருவ‌றையொன்று

அவன் பெய‌ரைக்
கேள்வியுற்ற
நாள்முதல் தேட
வேண்டிய‌தாயிற்று-
தூணில் துரும்பில்
காற்றில் நீரில்
தரையில் வானில்
மலைக்குன்றில்
குகையில் நாத‌த்தில்
புலப்படாத அவ‌ன்
வாச‌ம் நீண்டிருக்கும்
மாய உலகிலென-
அவனைப் பற்றிய
வதந்தி புறப்பட்ட
எல்லா திசையிலும்
தேடித்தேடிச் சேகரித்த
சோர்வை சலிப்பை
முழுதாய் நிரப்பி
வழிகிறது அவ‌னுக்கும்
என‌க்குமான க‌ருவ‌றை. 

-சோமா (Thanks to "THINNAI" Oct 2012)