என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Monday, 30 January 2012

துரோக‌ வேர்க‌ள்

கனத்து இறுகி நிற்கும்
மண் அடுக்குகளின்
நெற்றியில் முத்தமிட்டு
புறப்படும் காதல்
வெக்கையில் தன்
கூடலை இயம்புகின்றன‌
ஆணிவேர்கள்.

காதலியின் நெகிழ்வில்
நுனிதாய் சிறிதாய் பெரிதாய்
தன் கிளைகள் பரப்பி
காதலியின் ஆழம் நோக்கி
அவைகளின் இடங்களை
ஆக்கிரமிக்கின்றன.

காதலியின் இரத்தம்
உறிஞ்சி தாகம் தீர்த்து
மேனி சுவைத்து
உடல் பெருத்து
வாழ்நாளை நீட்டித்துக்
கொண்ட கர்வங்களை
சேர்த்து வைக்கின்றன‌
வேர் முடிச்சுகளில்.

புத்தனாய் புன்முறுவல்
தறித்து காலத்தின்
திசை நோக்கி தவம்
புரிகிறாள் காதலி
துரோக‌வேர்க‌ளைத்
திங்கும் காத‌லிக‌ள்
உயிர்ப்பு கொள்கிறார்க‌ள்.

-சோமா

Monday, 23 January 2012

ஐம்புல‌ன் அட‌க்க‌ம்

ஐம்புலனை அடக்கிச்
செறித்த அதிகாலை
ஆழ்ந்த உறக்கத்தின்
சோம்பலைத் தின்று
கனவு முளைத்தது.
பெருமான் பெருமாள்
முல்லா இயேசு புத்த‌ன்
வந்து அமர்ந்தனர் என்
ஞான முற்ற‌த்திற்கு.

அவ‌ர்க‌ளுக்கான‌ தேநீர்
த‌யாரிப்பின் மும்முர‌த்தில்
தொலைவில் இருந்த‌
க‌ண்ணாடி போதித‌ர்ம‌னை
உள்வாங்கியிருந்த‌து.
தேநீர் புசித்து புன்முறுவல்
சிந்தி புறப்படலாயினர்
நானும் உடன் புறப்பட்டேன்
அவர்கள் வீடு நோக்கி.

பெருமான் வீட்டுக்
கோபுரநிழல் ந‌ந்திவாக‌ன‌ம்
நவ‌க்கிர‌க‌ம் கால‌பைர‌வர்
அறுபத்து மூவ‌ர்
அகிலாண்டேஸ்வரி
க‌ட‌ந்து மூல‌வரைத் தேடிக்
க‌ர்ப்ப‌கிர‌க‌த்தில் கால‌டி
வைக்கையில் மாராப்பு
விலகி ஒருத்தி
என் கண் பட்டாள்.
சாத்தான்கள் துரத்தத்
தொடங்கின-கனவு
தொலைந்து போன‌து.

-சோமா (sgsomu@yahoo.co.in)

Wednesday, 11 January 2012

சூர்ப்பனையும் மாதவியும்

செல்வக்குடியில்
செம்மைப் பண்பில்
மனைவியின் அன்பில்
ஊறித் திளைக்கும்
ஆண்மை உருவங்கள்
வீதியில் உலவுகின்றன
இராமனாக இராவணனாக
கோவலன்களாக.

ஆண்மையை சுகிக்கத்
துடிக்கும் சூர்ப்பனை
மாதவிகள் வீசும்
தூண்டில்களின் காமப்
புழுக்களுக்கு இரைகளாக
கோவல மீன்களும்
தூண்டில்களை விழுங்கும்
சுறா இராமன்களை வீழ்த்த
சகோதர இராவணன்களும்
களமிறங்கியதில்
கண்ணகிகளும் சீதைகளும்
உயிர்ப்புப் பெறுகிறார்கள்.

சூர்ப்பனை மாதவிகளின்
ஆட்டுவிப்பிலும்
கண்ணகி சீதைகளின்
சாபத்திலும் கொல்லப்பட்டவரென
நீள்கிறது கோவல
இராவணன்களின் பட்டியல்.

கண்ணகி  சீதைகளின்
அகோரப் பசிகளுக்கு
இரைகளாக புதிய கோவல
இராவண ஆண்மைகளைப்
பிடித்து வரக் கடைத்தெருவில்
வாசம் கொள்கின்றனர்
மாதவி சூர்ப்பன ஏவல்கள்.


-சோமா