என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Friday, 14 October 2011

பேங்க் கேசியர்

எல்கேஜி யுகேஜி இருந்திராத‌
விருந்தினன் முன்பு ஏபிசிடி
ஒப்பிவிக்க வேண்டிராத
பள்ளி வளாகத்துக்குள்
தமிழில் பேசிக் கொள்ளும்
குறுந்தகடுகளிராத காலம்.

முதல் வருடம் உயிர் மெய் தமிழும்
மறு வருடம் ஒன்றிலிருந்து நூறும்
மூன்றாம் வருட இறுதி நாளில் "Z"ம்
மனனம் செய்தாலே வாய்ப்பாடு
வள்ளுவன் பாரதியென மனனம்
செய்யும் இலாவகம் கிட்டிவிடும்
இரண்டே வரியில் ஆங்கில பதிலை
அரைவேக்காட்டாய் ஒப்பிவித்தால்
நடுநிலைவகுப்பு தாவிடலாம்.

ஃபோயம், எஸ்ஸே, ஈஆர்சி, பாராகிராப்
என மனனம் செய்யும் பக்குவம் பெற்றால்
உயர்வகுப்பு உயர்வு கிடைக்கும்.

சைன் ஃகாஸ் ஃடேன் லேம்டா பீட்டா
வெர்டிபிரேட் இன்வெர்டிபிரேட்
ஆர்க்டிக் அண்டார்டிகாவென‌
சிறுமூளையை முழுதாய் நிரப்பி
பெருமூளையை திறந்து வைக்கலாம்.

இண்டகரேசன், டிப்ஃபரென்சியேசன்
பேபேஸி ஆஸ்ட்டரேஸி ப்யூப்பேஸி
மீத்தேன் புரப்பேன் ஆல்டிகைட்ஸ்
என புதிதாய் கட்டங்களில்
வார்த்தைகளை வரையத்தொடங்கினால்
கல்லூரிக் கதவுகள் திறந்திருக்கும்.

முழுதாய் ஆங்கிலத்திலும்
சிலதாய் இலத்தீன் கிரேக்கத்திலும்
சொற்களைச் சொந்தம் கொண்டாடி
ஏசி அறையில் நால்வர் முன்
ஒப்பிவித்தால் சொந்த ஊரில்
வங்கிக் காசாளர் பதவி நிச்சயம்.

Thursday, 13 October 2011

கூடாக் காமம்


கிளைகள் பரப்பி
கானகம் நிரப்ப
நாம் இட்ட எச்சத்தின்
ஈரம் தொலைத்த
சேதி வந்தது
நானின்றி நீயிட்ட
இன்னும் பல எச்சங்களின்
துரோக நிழல்களில்
தொலைந்து போயிருந்தது
அதன் ஜீவிதம்
பாலை நோக்கி
பயணிக்கிறேன் நீயில்லா
என் காதலோடு
எச்சத்தில்
கள்ளிச் செடி வளரலாம்.

          (நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Wednesday, 12 October 2011

சேராதிருத்தல்


என்னைக் கொன்று
உன்னைக் கொச்சைப்படுத்திய
நம் பல சொற்கள்
பரஸ்பர மன்னிப்புகளின்
தழுவல்களில் கரைந்து போன
காலங்களைத் தொலைத்தபோது
முடிவு கொண்டோம்
மன்னிப்புகளைத் தொலைத்த
நாம் சேராதிருத்தலென்று.


(நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Tuesday, 11 October 2011

மறுக்கப்பட்ட மன்னிப்பு


சொல்வனம் பரப்பி
துயரக்கணம் நிரப்பி
உயிரின் வழிதலோடு
பொரிக்கியெடுத்த வார்த்தைகள்
கழுவுமரமேற்றப்பட்டன
அகராதியைக் கற்பழித்த
குற்றம் சுமத்தி.
கண்கள் பிடுங்கப்பட்டன
கண்ணீர் சுரப்பிகள்
சிவப்பாய்ச் சொட்டியதற்காய்.
குறி அறுத்து மன்னிப்புகளைக்
காலடியில் கொட்டியதில்
இதயம் அறுக்க ஆணை வந்தது.
எப்பொழுதும் தூறல்கள்
தூற்றுதலுக்குள்ளாகின்றன
மழைக்காலத்தில்.
(நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Monday, 10 October 2011

கயவனின் கண்ணீர்

துரோகத் துக்கம் வடித்த
பச்சைப் பாசிகள்
ஹிருதயம் துளைத்து
ஊன்றி நிற்கின்றன
ஆணிவேர்களாய்.
முகர்ந்து பார்த்துக் கொண்ட
அக்குள் முடிக் குரோதங்கள்
வேர்களோடு பிடுங்கப்பட்டாயிற்று
தூக்கம் தொலைத்த இரவுகளில்
தமனி அறுத்து நீர் ஊற்றியும்
காய்ந்த பக்குகளை
அறுத்தெடுத்து உரமிட்டதிலும்
மலர்ந்திருக்கும் மன்னிப்புகளின்
சேதி கொண்டு வருகையில்
மரணித்திருந்தாய் நீ.

(நன்றி: உயிரெழுத்து-செப்டம்பர் 2011)