என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Wednesday, 21 December 2011

கவிஅரக்கன்

எண்ணங்களை எழுத்துக்களில் 
கோர்க்க‌ எத்தனிக்கும்
ஒவ்வொரு ஆத்மப்
பயணத்தின் இறுதியிலும் 
தன் மௌனங்களைக் கொன்ற‌ 
அடைகுறிகளோடு 
விழித்துக் கொள்கிறான்
என் ஞான அரக்கன்.

நீளும் கோரப் பசியில்
நாலாபுறமும் 
வார்த்தைகளைத் தேடி 
அலையும் அரக்கனின் 
கண்களுக்கு எதிர்படும்
வார்த்தைகள் அத்தனையும்
இரையாகி கவியுலக
மோட்சம் பெறுகின்றன.

வார்த்தைகளை விழுங்கிச்
செரித்த களிப்பின் மிகுதியில்
கண்ணயரும் அரக்கனை
மௌனக்கனவுகள் தின்று 
தீர்க்கின்றன - மிச்சப்பட்டவனாய்
விழித்துக்கொண்டதில்
முற்றுகையிட்டு ஒப்பாரி 
வைக்கின்றன வார்த்தைகள்.

-சோமா (sgsomu@yahoo.co.in)

Sunday, 11 December 2011

பிரம்மக்குயவனின் கலயங்கள்

சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில்
தனக்கான அழுத்தங்களைப்
பதித்து கோடுகளில் கலயங்களின்
தலைவிதி எழுதினான் குயவன்.

பின்பு நிலவின் இரவொன்றில்
காந்தர்வக் கண்ணன்களை
ராதைகளோடு உலவ விட்டான்
உலக வீதிகளின் ஆடை விலக்கி.

குயவ‌னுள் எழுந்த செறித்த 
வண்ணங்களை அப்பிக்
கொண்டு கண்ணன்கள் 
தங்கள் கோகுலங்களில்
ராதைகளைச் சிறை வைத்தனர்.

அவனின் வியர்வையை 
உள்ளிளுத்து வட்டம் தறித்த‌ 
கலயக்கோடுகள் கண்ணன்களின்
வயிறுகளுக்குப் பொங்கிப்
போட அனுப்பப்பட்டன.

கோகுலக்களிப்பின் மிகுதியில்
மஞ்சள் சிவப்பு பச்சையென‌
ராட்சசக் கண்ணன்கள் ஒன்று கூடி
கலயங்களை உடைக்கலாயினர்.

கோதைகள் பிரகலாதன்களை
சுமக்கத் தொடங்கினர்
குயவன் நரசிம்மன்களுக்கான‌
மண்தேடிப் புறப்படலானான்.

-சோமா (Thanks to Thinnai.com)

Tuesday, 22 November 2011

நம் மண்ணின் வளமும் போதிதர்மரும்

முதலில் ஓசோ பின்னர் டாக்டர் ருத்ரன் வழி இன்னும் பிற‌ தமிழ்ச் சமூகப் படைப்பாளர்கள் பெரு வாரியாய் உபயோகித்த வார்த்தைகள் "போதி தர்மர்" மற்றும் "ஜென்". இன்று பாமரனும் உபயோகப்படுத்தும் அளவுக்கு "ஏழாம் அறிவு" திரைப்படம் கொணர்ந்து வந்து விட்டது. என்றும் போல் "தமிழன்"என்கின்ற வெற்றுப் பெருமையோடு படம் முடிந்து திரும்புகின்ற எவரும் அந்த வார்த்தைகளின் ஆழத்தை முழுதாய் உணரவில்லை. பெருமையோடு நிம்மதி நிறைந்த உறக்கத்தை அந்த தினத்தில் அவர்கள் பெற்று இருந்தோராயின் அவர்களை இந்த மண்ணின் சகோதரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கம் கொள்கிறேன்.

படம் வெளியிடுவதற்கு முன்னும் பின்னும், தமிழ் இணையங்கள் எப்படி எடுத்துச் செல்கின்றன இந்த விசயத்தை என்று கூர்ந்து நோக்குகிறேன். போதிதர்மன் பல்லவன் என்றும், பல்லவன் என்பவன் திராவிடனா? இல்லை ஆரியனா? என்றும், களப்பிரர் சமூகத்தின‌ன் (கர்நாடகம்) என்றும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவன் என்றும் சர்ச்சைகள் கிளம்பி கேள்விப்போரில் போதிதர்மனும் ஜென்னும் சாதாரணமானவனுக்குப் புரியாதவர்களாய் இன்னும் தூரப்போய் நின்றுகொள்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் வரலாற்றுப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மை. போதிதர்மன் "ஜென்" என்கிற ஆன்மீக உத்தியை உபயோகப்படுத்தினார் என்பதும் அவர் இன்றையத் தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும். அவரைத் தமிழர் என்கிற ஒற்றைப் பொருளுக்குள் அணுகாமல் இந்த (தமிழகம்) மண்ணின் மைந்தன் என்று அலசுவோம்.

குரங்கிலிருந்து மனித மிருகம் பரிமாணம் கொள்கிறது. உணவுக்காக காடுகள், மலைகள் என அலைந்து பிற மிருகங்களையும் தாவரங்களையும் உண்டு செறித்து தன் வம்ச வழியைப் பெருக்கிக் கொள்கிறது. பிற மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சக மிருகங்களின் நட்பு அவசியப்படுககிறது.  கூட்டம் கூட்டமாய் வாழ்ந்தால் மட்டுமே தங்கள் வாழ்வு செழிக்குமென அறிந்து கொண்ட விலங்குகளின் அறிவு மிளிர் விடத் தொடங்கியதில் கூட்டம் கூட்டமாய் பயணிக்கிறார்கள். நிரந்தர இருப்பிடம் கொள்ளாது தொடரும் பயணங்களின் இறுதியில் அவர்கள் செழுமையான வண்டல் மண் பிரதேசங்களை அடைகிறார்கள். மனித விலங்குகளுக்கேற்ற சீதோச்ன நிலை, செழுமையான பயிர்கள், நீர் நிலையென விரிந்திருக்கும் காரணிகளால் பயணங்களை நிறுத்திக் கொண்டு தங்களுக்கான நிரந்தர முகவரிகளை அமைத்துக் கொள்கின்றன மிருகங்கள். பின்னாட்களில் இந்தப் பிரதேசங்களில் இருந்துதான் சிந்துச்சமவெளி, மொகஞ்சதாரோ சமவெளி என இன்னபிற நாகரீகங்களை வரலாற்று ஆய்வாளர்கள் பதிந்துவைத்துக் கொண்டனர். நம் மண்ணிற்கான நாகரீகம் கண்டறியப்படவில்லை அல்லது மறைந்து போயிருக்கிறது. இந்த விசயத்தில்தான் நமக்கானத் தொல்மையை/நாகரீகங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம்.

ஓரிடத்தில் அமரத் தொடங்கிய மனித மிருகங்கள் சிந்தனை ஆற்றலைப் பெற்று மனிதர்களாகிறார்கள். உணவு, இருப்பிடம், உடை மற்றும் இணைக்கானப் போட்டிகளை, சண்டைகளைக் குறைந்து அறிவு வளத்தைக் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பினை இந்த பூலோகம் மனித விலங்கிற்கு மட்டுமே வழங்கியது. நாகரீகம் செழித்து வளர்ந்த மண் மனித விலங்கை மனிதனாக பின்பு வெளிப்புற ஆய்வாளானாக, உள் நோக்கும் சித்தனாக, இயற்கையைப் (கடவுள் பெயர்களில் - மண்ணிர்கேற்றாற்போலத் தேடுதல்களில்) பூசிக்கும் பக்தனாக, நிகழும் ஆச்சர்யங்களின் மௌனியாக, புலப்படாத ஒன்றைத் தேடும் ஞானியாக, குருவாக, கடவுளாக உருப்பெறச் செய்கிறது. இதையே குரங்கிலிருந்து கடவுள் உருப்பெறும் நிகழ்வாகக் கொண்டால், இந்த வளர்ச்சியை மனிதர்கள் ஆக்கிக் கொண்டார்கள் என்பதை விட அவர்கள் தேர்த்தெடுத்துக் கொண்ட மண்ணின் வளத்தைப் பொருத்து அவர்களின் சிந்தனை நீட்சி பெற்றிருக்கக் கூடுமென்பதுதான் என்னுடைய வாதம். மண்ணின் வளத்தைப் பொறுத்து மனிதர்களின் வாழ்க்கைச் சூழலையும் அவர்களுக்கான நாகரீக வளர்வையும் தொடர்புபடுத்தலாம். அந்த வகையில் நம் மூதாதையர் தேர்ந்தெடுத்த இந்த மண் உலகிலேயே மிகுந்த அமைதி சூழ்ந்த, வளங்கள் நிரம்பிய பகுதியாகக் கொண்டாடப்படுகிறது.

நம் மூதாதைய மனிதக் குரங்குகள் பாரத‌த்தின் தென் பகுதியைத் தேர்ந்தெடுத்து வாசம் கொண்டார்கள். உலகின் எந்தப் பகுதிக்கும் கிட்டிராத, மனிதனுக்கேற்ற சரியான‌ சீதோச்ன நிலை (வருடம் முழுதும்), ஐந்து வகையான நிலங்கள், இயற்கை அன்னையின் இதயப் பகுதியாய், அத்தனை வளங்களும் செழித்த இந்த மண்ணிலிருந்து நம் மூதாதைய எண்ணங்கள் வளரத் தொடங்குகின்றன. உணவு உடை இருப்பிடம் என்பதைத் தேடும்  மனிதன் என்பதிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்கிறான். தன்னோடு வந்தவர் மட்டுமின்றி புதிதாய் வரும் மனித விலங்குகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இயற்கையாய் தொற்றிக் கொள்கிறது. கூடி நின்று கலைகளை வளர்க்கிறான். இலக்கியங்களைப் படைக்கிறான். ஆனால் ஒரு போதும் இயற்கையை அவன் சேதப் படுத்தியதில்லை. இருக்கின்ற இயற்கை நிலைகளில் எந்த மாற்றத்தையும் கொணராமல் தன்னை இயற்கையின்பால் ஒப்படைத்து தன் வாழ்வாதாரத்தை வகுத்துக் கொண்ட தலையாய இனம் இந்த மண்ணின் இனம். நடனம், இசை, சிற்பம் என எல்லாக் கலைகளிலும் இயற்கையை கடவுள்களின் பெயரில் பூஜித்தான். அவன் கடவுள் என்று வைத்துக் கொண்டது ஒரு நிலையேத் தவிர கண்மூடித் தனமான பூஜை புணஸ்காரங்கள் அல்ல.  இந்த நிலையில் ஆரம்பிக்கிறது அவனது உள்புறத் தேடுதல். இன்னும் நிலைகள் கூடி சித்தனாகிறான். அடுத்த நிலையில் தியானம், அமைதிக்கான வழிமுறைகள், ஜென் என்கிற நிலை (ஜென் என்பது மதமோ கொள்கையோ அல்ல. ஒரு ஆழ்ந்த அமைதி நிலை) என்று அவனால் அவனுக்காக வகுத்துக் கொண்ட இறுதி நிலைகளில் தன்னைக் கட்டுக் கொள்கிறான், பின்பு தன்னை கண்டு கொள்கிறான். ஆர்ப்பாட்டங்களிராத பூரண சன்னியாச நிலையாக அவன் வகுத்துக் கொண்ட நிலைதான் கடவுள் நிலை.  கடவுள் நிலை சாத்தியப்பட்ட அல்லது இயற்கை வகுத்துக் கொடுத்த புண்ணிய மண் இந்த மண். இந்த நிலையில் என்னுடைய பார்வை போதி தர்மரை நோக்கி விரிகிறது.

நிச்சயமாய் ஒரே ஒரு போதிதர்மரைக் கொண்ட மண்ணாக இந்த மண் இருந்திருக்க முடியாது. போதிதர்மர்களாக நிறைந்திருந்த ஒரு ஞானிகள் சமூகம்  இங்கே வாழ்ந்திருக்கக்கூடும். ஆதலினால் அவர்களின் வழிமுறைகளாய் அனைவரையும் ஏற்றுக் கொள்கிற பக்குவம் அடுத்த சந்ததியர்களுக்கு வந்திருக்கக் கூடும். மனதளவில் எந்த சமூகம் முன்னோக்கிச் சிந்தித்திருக்கிறதோ அந்த சமூகம் பூரணமாய் கலைச் சார்ந்த விசயங்களுக்குத் தாவி இயற்கையோடு ஒன்றி விடக்கூடும். அப்படிப்பட்ட சமூகம் இந்த மண்ணில் நிச்சயமாய் வாழ்ந்திருக்கும், அவர்களுக்கே உரித்தான கடவுள் நிலைகளில். அப்படிப்பட்ட கடவுள்கள் பிற மனித மிருகங்கள் வந்து தாக்குகின்ற போது மரணத்தையும் பூரணமாய் ஏற்றிருக்கக்கூடும். அந்த இனம் அழிந்தே போயிருக்கக் கூடும். அவர்களில் தப்பித்த வம்சாவளியினர் என்றோ அல்லது அவர்களைத் (கடவுள் நிலை) தாக்கி இந்த மண்ணை அபகரித்துக் கொண்ட வம்சாவளியினர் (மனித மிருகம்) என்றோதான் நம்மைக் கூறிக் கொள்ள வேண்டுமேயொழிய "போதி தர்மரின் பேரன்" என்று சொல்லிக் கொள்வது நம் மூதாதர்களையேக் கொச்சைப் படுத்துவதாய் அமையும்.

சரி. எப்படி அவரைச் சொந்தம் கொண்டாடுவது. மிகவும் எளிது. இதற்கு முன்னர் இதே மண்ணில் பிறந்து அவரின் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளையும், நிலைகளையும், இயற்கை அவருக்குக் கொடுத்த வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விலங்கு நிலையிலிருந்து கடவுள் நிலையை உய்யும் பக்குவம் கிட்டிய நமக்கு முன்னவர். இந்த மண்ணின் சொந்தக்காரர் என்னும் நிலையிலிருந்து. அவர் அடைந்த நிலைக்கு இந்த மண்ணின் செழிப்புதான் முக்கியம் என்பது என் திண்ணம். நேற்றைக்கு அவரைப் போலவே இந்த மண்ணின் ஆளுமையில் மனித நிலைகளைக் கடந்தவர்கள் வங்கத்துச் சித்தர்கள் விவேகானந்தரும் அரவிந்தரும். இன்னும் வெளியில் விளம்பரப் படுத்தப் படாத போதிதர்மர்கள் வாழ்ந்து கடவுள் நிலை அடைந்திருக்க ஒரே ஒரு போதிதர்மருக்குச் சண்டையிட்டுக் கொள்ளுதல் நம் முன்னோர் நிலைக்கு அழகன்று.

புரிகிறது, இனப் பெயரைக் கொண்டாட வேண்டாமா? வேண்டாம். அதுதான் ஜென். இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம். சரி இனத்தை சக இனம் அழிக்கிறதே..அது நிலத்திற்கான மோதல். நிச்சயமாய் நாம் ஞானிகள் நிலையில் இல்லை. விலங்கு நிலையில் இருந்து இனத்தைக் காப்போம். நம் மண்ணைக் காப்போம். இந்த மண்ணில் பூரண அமைதியைக் கொணரும் போது நம் குழந்தைகள் விலங்கு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கும் நம் பேரக் குழந்தைகள் இன்னுமொரு நிலை முன்னோக்கியும் செல்லக் கூடும். இந்த நிலைகள் வளர்ந்து போதிதர்மர்கள் வாழும் நம் சந்ததி குழந்தைகள் வருவதற்கு பல நூற்றாண்டுகளாகும். நாம் அதற்கான விதைகளைத் தூவ வேண்டியதில்லை. அதற்கான விதைகள் எற்கனவே விதைக்கப்பட்டாயிற்று. பட்டுப்போனச் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டிய கடமையிலிருந்து நாம் பிறழ்ந்து விட்டோம் என்பதுதான் உண்மை.

நம் மனித விலங்குகள் (இனம்) ஒன்று கூடி வாழும் பக்குவம் பெற வேண்டும். நம் இனத்திற்குச் சம்பந்தமிராத வேற்று நில வாழ்வு முறைகளை இடைச் செருகுவதற்கு அனுமதித்தல் கூடாது. நமக்குள் விட்டுக் கொடுக்கும் பரந்த தன்மையைப் பெற வேண்டும். மூதாதையைர்களையும் அவர்களின் ஆழமான (இடைச் செருகிய கண் மூடித்தனமில்லாத) இந்த மண்ணின் பொக்கிச வழிமுறையின் வழி எளிமையைப் பின்பற்ற வேண்டும். வறட்டு ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும். இயற்கையைப் பூஜிக்க வேண்டும். ஆழ்மன நிலையில் வாழும் பக்குவம் பெற்றவர்களாக, சந்தோசம் நிரம்பிய, அன்பைப் பொழிகின்ற, ஆன்மீகம் நிரம்பப் பெற்ற (கடவுள் நிலை-மனிதனின் உன்னத இறுதி நிலை) பேரப்பிள்ளைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

கூடி வாழ்வோம் குடுபங்களாக, நம் சமூகமாக. ச‌மூகம் தவிர்த்து தனிமனித வாழ்வு கோரி, நம்முள் ஊடுருவியிருக்கும் வேற்று நில மனித விலங்குகளைக் களையெடுக்கும் பணியும் நமதே. நம் நோக்கம் போதிதர்மர்கள் பிறப்பதற்கான அழகியச் சூழலை இந்த மண்ணுக்கு மீட்டுக் கொணர்தல்.http://www.thuruvam.com/2011/11/bodhidharma.html

(பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் அதை வெளி நாட்டார் வணக்கஞ் செய்திடல் வேன்டும்)

http://www.thuruvam.com/2011/11/bodhidharma.htm

நன்றி: துருவம் இணையதளம்

Thursday, 17 November 2011

ந‌டுநிசிகோடங்கி

நாய்களின் நடுநிசிகள்
தனதாக்கிக் கொண்ட‌
தெருவின் வழியே
நாய்களைத் துரத்தும்
கோடங்கிப் பயணம் எனது.
 
நான் பேயாய்த்
தெரிந்திருக்க‌க்கூடும்
நிறங்களைப் பிரித்தறியாத‌
நாய்க‌ளின் க‌ண்க‌ளுக்கு.
 
உர‌க்க‌க் குழைத்து
அடையாள‌ம் காட்டின‌-
பொங்கி வ‌ழியும்
அவைகளின் பயத்துடனான
ப‌ளிங்குக் க‌ண்களின் வழி
என் பேய் பிம்ப‌த்தை.
 
பேய் வேடம் தறித்து
நாய்க‌ளைத் துர‌த்த
ஆர‌ம்பித்த‌தில் நித்த‌மும்
என் ப‌ய‌ண‌த்தைத்
தெருக்க‌ள் விரும்பின‌.
 
நிம்ம‌தியிழ‌ந்த‌ நாய்க‌ள்
அடுத்த‌ தெருவில்
த‌ஞ்ச‌ம் புகுந்து
நான் செல்லும் தெருவில்
பேய் நட‌மாட்ட‌ம்
இருப்ப‌தை உறுதி செய்த‌ன‌.
 
ந‌டுநிசிக‌ளை
விழுங்க‌த் தொட‌ங்கிய‌து
நாய்க‌ளில்லாத தெரு.
 
-சோமா
(Thanks to Thinnai.com)

Friday, 14 October 2011

பேங்க் கேசியர்

எல்கேஜி யுகேஜி இருந்திராத‌
விருந்தினன் முன்பு ஏபிசிடி
ஒப்பிவிக்க வேண்டிராத
பள்ளி வளாகத்துக்குள்
தமிழில் பேசிக் கொள்ளும்
குறுந்தகடுகளிராத காலம்.

முதல் வருடம் உயிர் மெய் தமிழும்
மறு வருடம் ஒன்றிலிருந்து நூறும்
மூன்றாம் வருட இறுதி நாளில் "Z"ம்
மனனம் செய்தாலே வாய்ப்பாடு
வள்ளுவன் பாரதியென மனனம்
செய்யும் இலாவகம் கிட்டிவிடும்
இரண்டே வரியில் ஆங்கில பதிலை
அரைவேக்காட்டாய் ஒப்பிவித்தால்
நடுநிலைவகுப்பு தாவிடலாம்.

ஃபோயம், எஸ்ஸே, ஈஆர்சி, பாராகிராப்
என மனனம் செய்யும் பக்குவம் பெற்றால்
உயர்வகுப்பு உயர்வு கிடைக்கும்.

சைன் ஃகாஸ் ஃடேன் லேம்டா பீட்டா
வெர்டிபிரேட் இன்வெர்டிபிரேட்
ஆர்க்டிக் அண்டார்டிகாவென‌
சிறுமூளையை முழுதாய் நிரப்பி
பெருமூளையை திறந்து வைக்கலாம்.

இண்டகரேசன், டிப்ஃபரென்சியேசன்
பேபேஸி ஆஸ்ட்டரேஸி ப்யூப்பேஸி
மீத்தேன் புரப்பேன் ஆல்டிகைட்ஸ்
என புதிதாய் கட்டங்களில்
வார்த்தைகளை வரையத்தொடங்கினால்
கல்லூரிக் கதவுகள் திறந்திருக்கும்.

முழுதாய் ஆங்கிலத்திலும்
சிலதாய் இலத்தீன் கிரேக்கத்திலும்
சொற்களைச் சொந்தம் கொண்டாடி
ஏசி அறையில் நால்வர் முன்
ஒப்பிவித்தால் சொந்த ஊரில்
வங்கிக் காசாளர் பதவி நிச்சயம்.

Thursday, 13 October 2011

கூடாக் காமம்


கிளைகள் பரப்பி
கானகம் நிரப்ப
நாம் இட்ட எச்சத்தின்
ஈரம் தொலைத்த
சேதி வந்தது
நானின்றி நீயிட்ட
இன்னும் பல எச்சங்களின்
துரோக நிழல்களில்
தொலைந்து போயிருந்தது
அதன் ஜீவிதம்
பாலை நோக்கி
பயணிக்கிறேன் நீயில்லா
என் காதலோடு
எச்சத்தில்
கள்ளிச் செடி வளரலாம்.

          (நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Wednesday, 12 October 2011

சேராதிருத்தல்


என்னைக் கொன்று
உன்னைக் கொச்சைப்படுத்திய
நம் பல சொற்கள்
பரஸ்பர மன்னிப்புகளின்
தழுவல்களில் கரைந்து போன
காலங்களைத் தொலைத்தபோது
முடிவு கொண்டோம்
மன்னிப்புகளைத் தொலைத்த
நாம் சேராதிருத்தலென்று.


(நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Tuesday, 11 October 2011

மறுக்கப்பட்ட மன்னிப்பு


சொல்வனம் பரப்பி
துயரக்கணம் நிரப்பி
உயிரின் வழிதலோடு
பொரிக்கியெடுத்த வார்த்தைகள்
கழுவுமரமேற்றப்பட்டன
அகராதியைக் கற்பழித்த
குற்றம் சுமத்தி.
கண்கள் பிடுங்கப்பட்டன
கண்ணீர் சுரப்பிகள்
சிவப்பாய்ச் சொட்டியதற்காய்.
குறி அறுத்து மன்னிப்புகளைக்
காலடியில் கொட்டியதில்
இதயம் அறுக்க ஆணை வந்தது.
எப்பொழுதும் தூறல்கள்
தூற்றுதலுக்குள்ளாகின்றன
மழைக்காலத்தில்.
(நன்றி: உயிரெழுத்து - செப்டம்பர், 2011)

Monday, 10 October 2011

கயவனின் கண்ணீர்

துரோகத் துக்கம் வடித்த
பச்சைப் பாசிகள்
ஹிருதயம் துளைத்து
ஊன்றி நிற்கின்றன
ஆணிவேர்களாய்.
முகர்ந்து பார்த்துக் கொண்ட
அக்குள் முடிக் குரோதங்கள்
வேர்களோடு பிடுங்கப்பட்டாயிற்று
தூக்கம் தொலைத்த இரவுகளில்
தமனி அறுத்து நீர் ஊற்றியும்
காய்ந்த பக்குகளை
அறுத்தெடுத்து உரமிட்டதிலும்
மலர்ந்திருக்கும் மன்னிப்புகளின்
சேதி கொண்டு வருகையில்
மரணித்திருந்தாய் நீ.

(நன்றி: உயிரெழுத்து-செப்டம்பர் 2011)