என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Wednesday, 21 December 2011

கவிஅரக்கன்

எண்ணங்களை எழுத்துக்களில் 
கோர்க்க‌ எத்தனிக்கும்
ஒவ்வொரு ஆத்மப்
பயணத்தின் இறுதியிலும் 
தன் மௌனங்களைக் கொன்ற‌ 
அடைகுறிகளோடு 
விழித்துக் கொள்கிறான்
என் ஞான அரக்கன்.

நீளும் கோரப் பசியில்
நாலாபுறமும் 
வார்த்தைகளைத் தேடி 
அலையும் அரக்கனின் 
கண்களுக்கு எதிர்படும்
வார்த்தைகள் அத்தனையும்
இரையாகி கவியுலக
மோட்சம் பெறுகின்றன.

வார்த்தைகளை விழுங்கிச்
செரித்த களிப்பின் மிகுதியில்
கண்ணயரும் அரக்கனை
மௌனக்கனவுகள் தின்று 
தீர்க்கின்றன - மிச்சப்பட்டவனாய்
விழித்துக்கொண்டதில்
முற்றுகையிட்டு ஒப்பாரி 
வைக்கின்றன வார்த்தைகள்.

-சோமா (sgsomu@yahoo.co.in)

Sunday, 11 December 2011

பிரம்மக்குயவனின் கலயங்கள்

சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில்
தனக்கான அழுத்தங்களைப்
பதித்து கோடுகளில் கலயங்களின்
தலைவிதி எழுதினான் குயவன்.

பின்பு நிலவின் இரவொன்றில்
காந்தர்வக் கண்ணன்களை
ராதைகளோடு உலவ விட்டான்
உலக வீதிகளின் ஆடை விலக்கி.

குயவ‌னுள் எழுந்த செறித்த 
வண்ணங்களை அப்பிக்
கொண்டு கண்ணன்கள் 
தங்கள் கோகுலங்களில்
ராதைகளைச் சிறை வைத்தனர்.

அவனின் வியர்வையை 
உள்ளிளுத்து வட்டம் தறித்த‌ 
கலயக்கோடுகள் கண்ணன்களின்
வயிறுகளுக்குப் பொங்கிப்
போட அனுப்பப்பட்டன.

கோகுலக்களிப்பின் மிகுதியில்
மஞ்சள் சிவப்பு பச்சையென‌
ராட்சசக் கண்ணன்கள் ஒன்று கூடி
கலயங்களை உடைக்கலாயினர்.

கோதைகள் பிரகலாதன்களை
சுமக்கத் தொடங்கினர்
குயவன் நரசிம்மன்களுக்கான‌
மண்தேடிப் புறப்படலானான்.

-சோமா (Thanks to Thinnai.com)