என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Thursday, 18 October 2012

கதையொன்று

நகரெங்கும் கோரப்பசியுடன்
திரியும் என் கற்பனைக் குதிரை
எதிர்படும் யாவரையும்
தன் கதையின் மாந்தராக
உள்வாங்கி மென்று சரிவராது
போக பின்பு துப்புகிறது.

வெறிச்சோடிப் போன
அங்காடித்தெரு வழி நடக்கையில்
ஒரு வளையல்கடைக்கு
அடையாளம் காட்டித் தொங்கும்
இரசக்கண்ணாடி முன் நின்று
முகம் பார்த்து மெல்லத்
தொடங்குகிறது தன் கதையை.

-சோமா (Thanks to Kanavu, Oct 2012)

கட்டுரையொன்று

நேற்றையஇன்றைய
நாளைக்கான ஆழ்கடல்
முத்துக்களை மூச்சுத்
தொலைத்துத் தேடிக்
கண்ணயர்வோடுக் கோர்த்து
முடியப்படுவதில்
கொல்லப்படுகின்றன
அதையொட்டி வரும்
களைப்பாறும் எண்ணங்கள். 

முடிச்சுகளின் இறுக்கத்தில்
எழுதப்படுகிறது ஜீவித
முத்துக்களுடனான
கூடல் மணவாழ்க்கை
பலநேரம் துடிப்பும்
மறு நேரம் களிப்பும்
ஒரு நேரம் அயர்வும்
சிலநேரம் வெறுப்பும்
மாறிமாறி வந்து
போவதில் பிறக்கின்றன
பிள்ளைகள் ஒவ்வொரு
வண்ணத்தில்.

SOMA (Thanks to Kanavu-Oct-2012)


Friday, 5 October 2012

கவிதையொன்று

ஒரு கவிதை புனைவதற்கான
எந்த முன்னேற்பாடுமின்றி
நடந்து விடுகிறது
ஒரு தனிமைப் பயணம்.
இளங்காலைக் கனவு
பிடித்தமானவர்களுடனான
தேநீர் அளவளாவல்
மாலை வேளையின்
ஆள் நடமாட்டமில்லாத
சாலையோர நடை
மன நிறைவான தருணம்
கடந்து போகும் அழகுப்பெண்
கண் சிமிட்டிச் சிரித்து
மடியில் வந்து அமரும்
எதிர் வீட்டு மழலை
நீரோடையில் ஒரு
நிர்வாணக் குளியல்
துரத்திப் பின்னால் வரும்
முழு நிலவின் வெட்கம்
கோயில் கர்ப்பக்கிரக
ஆழ்ந்த தியானமென
வாழ்ந்து இன்புற்ற
பூரண சுகானுபவத்தை
வார்த்தைகளுக்குள்
அடக்கி விட முயற்சித்துத்
தோற்றுப்போகின்றன
கவிதைகள்.

சோமா (Thanks to Kanaiyazhi, October 2012)

Thursday, 4 October 2012

க‌ருவ‌றையொன்று

அவன் பெய‌ரைக்
கேள்வியுற்ற
நாள்முதல் தேட
வேண்டிய‌தாயிற்று-
தூணில் துரும்பில்
காற்றில் நீரில்
தரையில் வானில்
மலைக்குன்றில்
குகையில் நாத‌த்தில்
புலப்படாத அவ‌ன்
வாச‌ம் நீண்டிருக்கும்
மாய உலகிலென-
அவனைப் பற்றிய
வதந்தி புறப்பட்ட
எல்லா திசையிலும்
தேடித்தேடிச் சேகரித்த
சோர்வை சலிப்பை
முழுதாய் நிரப்பி
வழிகிறது அவ‌னுக்கும்
என‌க்குமான க‌ருவ‌றை. 

-சோமா (Thanks to "THINNAI" Oct 2012)

Sunday, 9 September 2012

பிரியமொன்று

நெரிசலை அள்ளிக்
கொண்டு செல்லும்
பேருந்தில் என்னோடு
இருக்கையை பரிமாறிக்
கொள்ள வந்தமர்கிறாள்
உன்னைப் போல் ஒருத்தி.

ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளைச் சற்றும்
உரசி விடாதவாறு
பார்த்துக் கொள்கிற‌து
என் பிரியம்.

நீயில்லாத‌ த‌ருண‌ம்
வந்து போகும் என்
கோர‌க்குண‌த்தை
சிறைப்பிடிக்கிற‌து
உன் பிரிய‌ம்.

சோமா (Thanks to "Ananda Vikatan" - May 2012)

Wednesday, 8 August 2012

எழுதப்படாத கவிதை

நினைவில் தக்க வைத்துக்
கொள்ள எண்ணும் தருணத்தை
தொலைத்து விடுவதில்
வந்து முளைக்கின்றன
என‌க்கான வார்த்தைகள்-
மிச்சப்படும் வார்த்தைக‌ளை
சேகரித்துக் கொண்டு
ப‌ஸ் டிக்கெட் ம‌ருந்துச்சீட்டு
ஹோட்ட‌ல் பில்
அர்ச்ச‌னைச் சீட்டு
தியேட்ட‌ர் டிக்கெட் என‌
குறிப்புக் காகித‌ங்களாக‌
நிர‌ம்பி வ‌ழிகிற‌து மேசை.
எழுத‌ப்ப‌டாத‌ க‌விதையைச்
சும‌ந்து கொண்டு க‌ன‌க்கிற‌து
என் அறையும் ஹிருத‌ய‌மும்.

SOMA (Thanks to "Pudupunal" - Aug 2012)

Friday, 3 August 2012

கோர்க்கப்படாத வார்த்தை

எண்ணங்களை எழுத்துக்களில்
கோர்க்கஎத்தனிக்கும்ஒவ்வொரு 
ஆத்மப்பயணத்தின் இறுதியிலும்
தன் மௌனங்களைக் கொன்ற
அடைகுறிகளோடு
விழித்துக் கொள்கிறான்
என் ஞான அரக்கன். 

நீளும் கோரப் பசியில்
நாலாபுறமும்
வார்த்தைகளைத் 
தேடிஅலையும் அரக்கனின்
கண்களுக்கு எதிர்படும்
வார்த்தைகள் அத்தனையும்
இரையாகி கவியுலக
மோட்சம் பெறுகின்றன. 

வார்த்தைகளை விழுங்கிச்
செரித்த களிப்பின் மிகுதியில்
கண்ணயரும் அரக்கனை
மௌனக்கனவுகள் தின்றுதீர்க்கின்றன - 
மிச்சப்பட்டவனாய்விழித்துக்
கொண்டதில்முற்றுகையிட்டு 
ஒப்பாரிவைக்கின்றன 
வார்த்தைகள்.

-சோமா (Thanks to "Pudupunal" Aug 2012)