என்னுடைய சுற்றுப் பயணத்தை , அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக நான் எழுதுவது கடினம். ஏனெனில் அதில் "நான்" "என்னுடைய" என்கிற அம்சத்தை தவிர்க்க முடியவில்லை. அதனால் என்னால் பயணக் கட்டுரை எழுத முடியாது - முன்னாள் ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா.

Friday, 27 July 2012

ஸ்நேக‌ மௌன‌ங்க‌ள்

புன்னகைப் பூவின் வாசமும்
சந்தோச ஒலியின் இசையும்
ஆர்ப்ப‌ரித்த‌ ந‌ந்த‌வ‌ன‌
வீடுக‌ளில் ந‌ம் ஸ்நேக‌ங்கள்
லயித்து வ‌சித்திருந்த‌ன‌.
ஒத்துப் போயிராத
கால‌ங்களென புதிதாய்
ந‌ந்த‌வ‌ன‌த்தில் முளைத்த‌
க‌ளைச்செடிகள் உனக்கான
மௌனங்களைப்
பூக்கத் தொடங்கின.
மௌன‌ங்க‌ளைச் சும‌க்கும்
நம் ந‌ந்த‌வ‌ன வீடுக‌ள்
ஆழ்ந்த‌ துக்க‌த்தை
வளர்த்த இடைவெளியை
ஸ்நேக‌ ம‌ர‌ண‌த்தை
துப்பிய‌ வ‌ண்ண‌ம்
ம‌திய‌ ம‌யான‌மாய்
ந‌ந்த‌வ‌ன‌த்தை எச்சில்க‌ளில்
நிறைக்கிற‌து.
உன் மௌன ம‌யான‌ங்க‌ளின்
ஒரு அறையில் நீ பிண‌மாக‌வும்
நான் சிதைமூட்டுபவ‌னாக‌வும்
வேறொரு அறையில்
நான் பிண‌மாக‌வும்
நீ சிதை மூட்டுப‌வ‌னாக‌வும்
மிச்ச‌ப்ப‌ட்டு நிற்கிறோம்.
எரித்துக் கொண்டிருக்கிறது
மொத்த‌ ந‌ந்த‌வ‌ன‌த்தையும்-
உன்னையும் என்னையும்
துரத்தும் நம் மௌனங்கள்.
-சோமா (Thanks to "Vadakku Vaasal"- Feb 2012

காற்றின் மரணம்

வல்லிய நரம்பசைவில்
சேதமுற்று அழும்
பெருங்குரல்-பறையடித்த
அதிர்வை உள்வாங்கி
புடைக்கும் காயத்தின் கதறல்
சுதந்திரத்தைப் பறித்து
ஒரு குழலுக்குள்
அடிமைப்பட்டு அழும் ஆழம்
பெரும் நுகர்தலின்
களிப்பில் சாலைக்கரிமக்
கரைகளைச் செரித்து
மூச்சுக்குழாய் வழி
நுரையீரல் ஆலை சென்று
முகத்தில் கரிமத்தைப்
பூசிக்கொள்கிற நிமிடமென
மரணத்தின் ஓலத்தை ஓயாது
சுமந்து கொண்டு
பயணிக்கிறது காற்று. 

-சோமா (Thanks to "Varppu"-July 2012)

Wednesday, 4 July 2012

சொல்லப்படாத பிரியங்கள்

வருடம் பல கடத்தி
தனிமைச் சோர்வு நிரப்பி 
சந்தித்துக் கொண்டோம்-
ஒரு இலையுதிர் மாலையில்
காலச்சக்கரத்தில் ஒன்றாய்
 
இணைந்த இரு முள்களாக.

தனிமைப் பயணத்தின்
அசதியை போக்கிக் கொள்ள 
நம் இருப்பு இல்லாது
தொலைந்து போன
பிரியங்களை மீட்டுக்
கொணரும் முயற்சியாக
இருவரும் புன்முறுவலைச்
சிந்தி அவ்விடத்தை
பூக்களில் நிரப்பினோம்.

காலத்தை மறைக்கலாம்
என்றாய் - மறக்கலாம் என்றேன்
சாய்ந்து கொள்ள தோளொன்று
தேவைப்படுவதென சொன்னாய்
படுத்துக் கொள்ள மடியொன்று
கிடைத்தால் வசதியெனச் சொன்னேன்.

சொரியும் கண்ணீரைத்
துடைத்து விட கரமொன்று
வேண்டுமென்றாய் - மாலை
வேளை புன்னைமர
மஞ்சள் பூக்களோடு உறவாடப்
பெண் தேவை என்றேன்.

நீளும் சாலையில் ஆண் கரம்
பற்றி கர்வத்தோடு நடக்க
வேண்டுமென்றாய்-பைக்கின்
பின்புறம் என்மீது சாய்த்துக்
 
கொண்டு நகரவீதிகளை
வலம் வர வேண்டுமென்றேன்.

கனவுச் சஞ்சரிகையில்
மூழ்கித் திளைத்த என்னை
எழுப்பி விட்டு நன்றி சொல்லி
நகர்ந்தாய் - ஒரு நாடகத்துக்கான 
ஒத்திகை முடிந்த திருப்தியோடு.
முள்கள் சுழலத்தொடங்கின
காலப்பெட்டிக்குள் எவ்வித
பிரிதல் வருத்தமுமின்றி.

-சோமா (Thanks to Thinnai.com)